செய்திகள்

சத்தியமங்கலம் வன காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு: துணை இயக்குனர் தகவல்

Published On 2016-07-30 09:01 IST   |   Update On 2016-07-30 09:01:00 IST
சத்தியமங்கலம் வன காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது என சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜ்குமார் கூறினார்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளான தலமலை, கெஜலட்டி, தெங்குமரஹடா, தாளவாடி, பவானிசாகர் ஆகியவை புலிகள் வசிக்க உகந்த இடங்களாக உள்ளன.

இந்த பகுதிகளில் மனித நடமாட்டம் குறைவாகவும், நீர் நிலைகள் உள்ள இடமாகவும், அதிக பரப்பளவு கொண்டதாகவும் இருப்பதால் புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு 22-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது எடுத்த கணக்கெடுப்பில் சுமார் 60 ஆக உயர்ந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த அளவுக்கு புலிகள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் காப்பகத்தை பராமரிக்க ஆண்டுக்கு மத்திய அரசின் சார்பில் 70 சதவீதமும், தமிழ்நாடு அரசின் சார்பில் 30 சதவீதமும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதில் புலிகள் பாதுகாப்பு, நீர் நிலைகள் ஏற்படுத்துதல், தடுப்பணை கட்டுதல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக ரூ.5 கோடி வரை ஒதுக்கப்படுகிறது.

இந்த தகவலை சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் கே.ராஜ்குமார் தெரிவித்தார்.

Similar News