தமிழ்நாடு செய்திகள்
கோப்புப்படம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ராமநாதபுரத்தில் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2023-11-15 11:03 IST   |   Update On 2023-11-15 11:03:00 IST
  • வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் வரலாறு காணாத பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் எங்களின் படகுகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அவை பலத்த சேதமடைந்து விடுகிறது.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் வரலாறு காணாத பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதன் எதிரொலியாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவி பட்டணம், சோழியகுடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

இதேபோன்று தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மன்னார்வளைகுடா கடலுக்கு செல்கின்றனர். தற்போது புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை அவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 1,650 விசைப்படகுகள் மற்றும் 6,500 நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 2 லட்சத்திற்கும் அதிகமான மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இதுபற்றி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த 1 மாத காலமாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.

தீபாவளி முடிந்து ஒருநாள் தான் கடலுக்கு சென்றோம். அதற்குள் தற்போது புயல் எச்சரிக்கையால் மீண்டும் கடலுக்கு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் எங்களின் படகுகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அவை பலத்த சேதமடைந்து விடுகிறது. எனவே போதிய துறைமுக வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் சமயங்களில் வாழ்வாதாரம் காக்க நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

புயல் எச்சரிக்கையால் இன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். மீன்பிடி தொழில் சார்ந்த பல கோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News