தமிழ்நாடு

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்களிக்க தயாரான 16,08,521 வாக்காளர்கள்- 13 வேட்பாளர்கள் போட்டி

Published On 2024-04-18 07:31 GMT   |   Update On 2024-04-18 07:31 GMT
  • திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  • ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும்.

திருப்பூர்:

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264 வாக்குச்சாவடிகள், பவானியில் 289, அந்தியூரில் 262, கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் உள்ளன.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 245 பெண் வாக்காளர்களும், 252 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேர் உள்ளனர். நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும். இதில் வேட்பாளரை வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள்.

வாக்குப்பதிவு நாளை மாலை நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜிபிஎஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிறிஸ்து ராஜ், நேற்று சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார். திருப்பூர் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கூடுதலாக ஈடுபடுவதுடன், அந்த மையங்கள் முழுவதும் சிசிடிவி., கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News