கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா தகுதி
- கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 16-ந் தேதி வரை சைப்ரசில் நடக்கிறது.
- கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்கும் 8 வீரர்கள் தங்களுக்குள் தலா இரு முறை மோத வேண்டும்.
சென்னை:
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மூலம் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அடுத்த ஆண்டு நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் குகேசை எதிர்கொள்ளும் வீரர் யார் என்பதை கண்டறிய கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 16-ந் தேதி வரை சைப்ரசில் நடக்கிறது.
8 வீரர்கள் இடையிலான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு அமெரிக்காவின் பாபியானோ கருனா, ரஷியாவின் ஆந்த்ரே இசிபென்கோ, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் மதியாஸ் புளுபாம், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ், சீனாவின் வெய் யி ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 7-வது வீரராக அந்த போட்டிக்கு தமிழகத்தின் பிரக்ஞானந்தா தகுதி பெற்றிருப்பதாக சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) நேற்று அறிவித்தது. 2025-ம் ஆண்டுக்கான 'பிடே' செஸ் சர்க்யூட்டில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு வீரரின் சிறந்த 7 போட்டிகளின் முடிவை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில் 115.17 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த பிரக்ஞானந்தா அதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கான வாய்ப்பை தட்டிச் சென்றார். மற்றொரு இடம் அமெரிக்க முன்னணி வீரர் ஹிகரு நகமுராவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்கும் 8 வீரர்கள் தங்களுக்குள் தலா இரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும் வீரர் உலக சாம்பியனை சந்திப்பார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு இந்த தடவை இந்திய தரப்பில் பிரக்ஞானந்தா மட்டுமே தகுதி பெற்றுள்ளார். அதே சமயம் பெண்களுக்கான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு இந்தியாவில் இருந்து திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருக்கிறார்கள்.