விளையாட்டு

சர்வதேச செஸ் தொடர்: உஸ்பெகிஸ்தான் வீரர் சாம்பியன்- இந்திய வீரர்கள் ஏமாற்றம்

Published On 2026-02-03 08:45 IST   |   Update On 2026-02-03 08:46:00 IST
  • இந்திய வீரர்கள் குகேஷ் 9-வது இடமும், பிரக்ஞானந்தா 11-வது இடமும் பிடித்தனர்.
  • அரவிந்த் சிதம்பரம் 12-வது இடமும், அர்ஜூன் எரிகைசி 13-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

விஜ்ன் ஆன் ஜீ:

டாட்டா ஸ்டீல் 88-வது சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 13-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோரோவ், இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசியை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் ஆடிய நோடிர்பெக் 55-வது நகர்த்தலில் அர்ஜூன் எரிகைசியை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாராவ் 82-வது நகர்த்தலில் செக்குடியரசின் தாய் டாய் வான் நுயெனை சாய்த்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 65-வது நகர்த்தலில் சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசோவ்விடம் வீழ்ந்தார்.

பிரக்ஞானந்தா (இந்தியா)- ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து), உலகக் சாம்பியன் குகேஷ் (இந்தியா)- வின்சென்ட் கீமர் (ஜெர்மனி) ஆகியோர் இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

கடைசி சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜவோகிர் சிந்தாராவ் 8½ புள்ளிகளுடன் 2-வது இடமும், ஜோர்டான் வான் பாரஸ்ட் 7½ புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

இந்திய வீரர்கள் குகேஷ் (6½ புள்ளி) 9-வது இடமும், பிரக்ஞானந்தா (5½) 11-வது இடமும், அரவிந்த் சிதம்பரம் (4½) 12-வது இடமும், அர்ஜூன் எரிகைசி (4½) 13-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். தாய் டான் வான் நுயென் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Tags:    

Similar News