செய்திகள்
இளவேனில் - சவுரப் சவுத்ரி

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? இளவேனில், சவுரப் சவுத்ரி இன்று களம் இறங்குகிறார்கள்

Published On 2021-07-24 02:25 IST   |   Update On 2021-07-24 02:25:00 IST
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி இன்று அரங்கேறுகிறது.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்புள்ள துப்பாக்கி சுடுதலில் இந்திய நட்சத்திரங்கள் இளவேனில், சவுரப் சவுத்ரி இன்று களம் காணுகிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. முதல் நாளில் பதக்கபோட்டிகள் எதுவும் கிடையாது. 2-வது நாளான இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்குரிய போட்டிகள் நடக்கின்றன. இந்த ஒலிம்பிக்கின் முதல் தங்கப்பதக்கம் துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிளில் வழங்கப்படுகிறது.

துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 15 பேர் கொண்ட வலுவான அணியை அனுப்பியுள்ளது. அவர்கள் குரோஷியாவில் பயிற்சிகளுடன் போட்டிகளில் பங்கேற்று விட்டு டோக்கியோவுக்கு வந்துள்ளனர்.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி இன்று அரங்கேறுகிறது.

10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டிலா, இளவேனில் வளறிவான் ஆகியோர் அடியெடுத்து வைக்கிறார்கள். குஜராத்தில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த 21 வயதான இளவேனில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2 முறை தங்கம் வென்றவர். ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக வலம் வரும் அவர் பதக்க மேடையில் ஏறுவதற்குரிய வாய்ப்பு அதிகம். ராஜஸ்தானைச் சேர்ந்த 28 வயதான அபூர்வி தரவரிசையில் 11-வது இடம் வகித்தாலும் உலக போட்டியில் மகுடம் சூடிய அனுபவம் உண்டு. தனது முழு திறமையை வெளிப்படுத்தினால் அவரும் அசத்தலாம்.

தகுதி சுற்றில் மொத்தம் 49 பேர் பங்கேற்கிறார்கள். இதில் இருந்து டாப்-8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதி சுற்று இந்திய நேரப்படி காலை 7.15 மணிக்கு நடக்கிறது.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி குறி வைக்கிறார்கள். இவர்கள் தங்களது பிரிவில் உலக தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் எதிர்பார்ப்புக்கு குறைவில்லை.

வழக்கறிஞர் படிப்பு படித்து விட்டு 2017-ம் ஆண்டில் துப்பாக்கியை கையில் எடுத்து இன்று ‘நம்பர் ஒன்’ நிலையை எட்டியிருக்கும் அபிஷேக் வர்மா 2019-ம் ஆண்டு உலக துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் கைப்பற்றியவர். 19 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த சவுரப் சவுத்ரி இளையோர் விளையாட்டிலும், ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டவர். டெல்லியில் 2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் அதிக புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்தவர்.

இவர்கள் மட்டும் 8 பேர் கொண்ட இறுதி சுற்றுக்குள் கால்பதித்து விட்டால் அதன் பிறகு பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகி விடும். காலை 10.15 மணிக்கு தகுதி சுற்றும், பகல் 12 மணிக்கு இறுதி சுற்றும் நடக்கிறது.

Similar News