செய்திகள்
ஜேசன் ஹோல்டர், பென் ஸ்டோக்ஸ்

எங்களது சிறப்பான வெற்றிகளில் இதுவும் ஒன்று: ஜேசன் ஹோல்டர் பெருமிதம்

Published On 2020-07-13 11:15 GMT   |   Update On 2020-07-13 11:15 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைவதற்கு முதல் இன்னிங்சில் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்ததே காரணம் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய  முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் நடந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்து 'ஆல் அவுட்' ஆனது. 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 

4-வது  நாள் ஆட்டநேர முடிவில் 8  விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்து இருந்தது. நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 313 ரன்னில்  "ஆல் அவுட்" ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 200 ரன்  இலக்காக இருந்தது.

கிராவ்லி 76 ரன்னும், சிப்லி 50 ரன்னும் எடுத்தனர். கேப்ரியல் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ராஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும், ஹோல்டர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பிளாக் வுட்டின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி  6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிளாக்வுட் 96 ரன்னும், ராஸ்டன் சேஸ் 37 ரன்னும் எடுத்தனர். ஆர்ச்சர் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே 117 நாட்களுக்குப் பிறகு நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

இந்த வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது;-

4-வது நாள் ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. பவுலர்களால் இந்த சிறப்பான வெற்றியைப் பெற்றோம். எனது தலைமையின் கீழ் நான் பார்த்த சிறந்த பந்து வீச்சு ஆகும். இங்கிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் ஜோ ரூட் இல்லாததும் எங்களுக்கு சாதகமே. எங்களது சிறப்பான வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும்.

இவ்வாறு அவர் கூறினார்

தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

இந்த டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. முதல் இன்னிங்சில் நாங்கள் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறு என்று கருதவில்லை.

350 முதல் 400 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்று இருப்போம். நாங்கள் கடுமையாக போராடிதான் தோற்றோம். ஸ்டூவர்ட் பிராட்டை அணியில் இருந்து நீக்கியதற்காக வருத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 16- ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
Tags:    

Similar News