செய்திகள்
ஹர்பஜன்சிங்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு ஹர்பஜன்சிங் உதவி

Published On 2020-04-06 07:36 GMT   |   Update On 2020-04-06 07:36 GMT
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்க ஹர்பஜன்சிங் முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அன்றாட கூலி தொழிலாளர்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாப்பை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உணவு வழங்குகிறார். ஜலந்தர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார். விரைவில் அவர் உணவு வழங்குவார்.

39 வயதான ஹர்பஜன் சிங் இது தொடர்பாக கூறும்போது ‘எனது உணவு வழங்கும் பணி தொடரும். வீடு இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் ஆகியோருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு வழங்கப்படும்‘ என்றார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பாதிக்கப்பட்டவர்களுக்காக தினமும் 10,000 பேருக்கு உணவு வழங்க தேவையான நிதியை அளித்து இருந்தார்.

கொரோனாதடுப்பு பணிக்காக பிரதமர் நிவாரணத்துக்கு விளையாட்டு பிரபலங்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ரூ. 50 லட்சம் நிதி உதவியை அளித்துள்ளார்.

Tags:    

Similar News