செய்திகள்
கோப்புபடம்

கொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் ரத்தாகிறது

Published On 2020-03-31 09:26 GMT   |   Update On 2020-03-31 09:26 GMT
உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுகிறது.
லண்டன்:

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல விளையாட்டுப் போட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா வான ஒலிம்பிக் போட்டி இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஐரோப்பிய கால்பந்து ஆட்டமும் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இரு நாடுகள் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் பாதியில் ரத்தானது. பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியும் ஏப்ரல் 15- ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ரத்தாகிறது. இதேபோல பல போட்டிகளும் பாதிக்கப்பட்டன.

டென்னிஸ் போட்டிகளில் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாம் போட்டிகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்ன் நகரில் ஜனவரிபிப்ரவரி மாதம் நடத்தப் பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்ச் ஓபன் போட்டி செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதை ஜெர்மன் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் தெவித்தனர். லண்டன் போட்டி அமைப்பாளர்கள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நாளை அறிவிக்கிறார்கள்.

முன்னதாக விம்பிள்டனை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ மாட்டோம் என்று போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். தற்போது கொரோனாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதால் வேறு வழியில்லாமல் ரத்தாகிறது.
Tags:    

Similar News