செய்திகள்
சதம் அடித்த ஹனுமா விஹாரி

பயிற்சி ஆட்டத்தில் புஜாரா, விஹாரி சிறப்பான ஆட்டம்: பிரித்வி ஷா, ஷுப்மான் கில், அகர்வால் சொதப்பல்

Published On 2020-02-14 08:24 GMT   |   Update On 2020-02-14 08:24 GMT
நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா, விஹாரியைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப இந்தியா 263 ரன்னில் சுருண்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இதேபோல ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

இரு அணிகள் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 21-ந் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.

டெஸ்ட்டுக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து லெவலுடன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, அகர்வால் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமலும், அகர்வால் ஒரு ரன்னிலும் வெளியேறினார்கள். அடுத்து வந்த புதுமுக வீரர் ஷுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமலும், ரகானே 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 38 ரன்னுக்குள் இந்தியா 4 விக்கெட்டை இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா - விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரை சதத்தை கடந்தனர். அவர்களது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு முன்னேற்றம் அடைந்தது.

புஜாரா 93 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விஹாரி 101 ரன்னில் ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறினார். அப்போது இந்தியா 245 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் வந்த ரிஷப் பண்ட் (7), சகா (0), அஷ்வின் (0) ஜடேஜா (8) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 263 ரன்னில் சுருண்டது. 78.5 ஓவர்கள் வீசப்பட்டதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. குகலின், இஷ் சோதி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
Tags:    

Similar News