செய்திகள்
சிந்து - சாய்னா

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதிக்கு சிந்து, சாய்னா முன்னேற்றம்

Published On 2019-10-25 05:30 GMT   |   Update On 2019-10-25 05:30 GMT
பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னா காலிறுதிக்கு முன்னேறினர்.
பாரீஸ்:

மொத்தம் ரூ.5½ கோடி பரிசுத்தொகைக்கான பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான பி.வி.சிந்து (இந்தியா) 21-10, 21-13 என்ற நேர் செட் கணக்கில் யோ ஜியா மின்னை (சிங்கப்பூர்) தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. சிந்து அடுத்து ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) சந்திக்க வேண்டி வரலாம்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான இந்தியாவின் சாய்னா நேவால் 21-10, 21-11 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லினே ஹோஜ்மார்க்கை வெளியேற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் உலக சாம்பியனான இந்தோனேஷியாவின் முகமது ஆசன்-ஹென்ட்ரா செடியவான் இணைக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதியை உறுதி செய்தது.
Tags:    

Similar News