செய்திகள்
நஸ்முல் ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசன்

வங்காளதேச கிரிக்கெட் வீரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது- இந்திய சுற்றுப் பயணத்திற்கு தயார்

Published On 2019-10-24 06:58 GMT   |   Update On 2019-10-24 06:58 GMT
ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தாகா:

வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் ஊதிய விகிதம், பெண் வீராங்கனைகளுக்கான சம ஊதியம், இதர சலுகைகள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டிற்கு திரும்பமாட்டோம் என கேப்டன் ஷாகிப் அல் ஹசன் உள்பட சீனியர் வீரர்கள் பத்திரிகைகளுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. வீரர்கள் போராட்டத்தால் இந்தத் தொடர் பாதிக்கும் நிலை இருந்தது.

‘‘இந்தியத் தொடர் நெருங்கும் நேரத்தில் வீரர்களின் எதிர்பாராத இந்த போராட்டம், நாட்டின் கிரிக்கெட்டிற்கு எதிரான சதியாக பார்க்கப்படுகிறது. இந்த சதிக்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடிப்போம்’’ என வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் நஸ்முல் ஹசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தை கைவிட்டு, இந்திய சுற்றுப்பயணத்திற்கு தயார் ஆகி வருவதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களுடன் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஊதியம், சலுகைகள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வீரரகள் அனைவரும் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று விளையாட ஒப்புதல் அளித்துள்ளனர். போராட்டத்தையும் வாபஸ் பெற்றுள்ளனர். 

பேச்சுவார்த்தையில் வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர்களான ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா மற்றும் தமீம் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News