செய்திகள்

வங்காளதேச பிரிமீயர் லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் 2 ரன்னில் த்ரில் வெற்றி

Published On 2019-01-11 12:45 GMT   |   Update On 2019-01-11 12:45 GMT
வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்கெதிராக டாக்கா டைனமைட்ஸ் இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. #BPL
வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் - ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டாக்கா டைனமைட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

பொல்லார்டு 26 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களும், ரசல் 23 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் (8), மெஹெதி மருஃப் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரோஸவ், முகமது மிதுன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரோஸவ் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ரங்க்பூர் ரைடர்ஸ் அணி 15.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. 27 பந்தில் 38 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தன. 17 ஓவர் முடிவில் ரங்க்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 3 ஓவரில் 26 ரன்கள்தான் தேவைப்பட்டது.

18-வது ஓவரை அல் இஸ்லாம் வீசினார். இந்த ஓவரின் கடைசி மூன்று பந்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முகமது மிதுன் 49 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த மோர்தசா முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த பர்கத் ரேசாவையும் டக்அவுட்டில் வீழ்த்தினார். இதனால் ரங்க்பூர் அணி மளமளவென விக்கெட்டை இழந்தது.

கடைசி இரண்டு ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் இருந்தன. சுனில் நரைன் வீசிய 19-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்த ரங்க்பூர் 2 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் கைவசம் ஒரு விக்கெட் இருக்க கடைசி ஓவரில் ரங்ப்பூர் அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை அல் இஸ்லாம் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ஷபியுல் இஸ்லாம் பவுண்டரிக்கு விளாசினார். இதனால் நான்கு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் ஒரு கொடுத்த இஸ்லாம், 4-வது பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.

அடுத்த இரண்டு பந்திலும் ரங்க்பூர் அணி தலா ஒரு ரன் மட்டுமே அடித்ததால் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டாக்கா டைனமைட்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News