செய்திகள்

சிட்னி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் வெற்றி

Published On 2017-01-07 06:16 GMT   |   Update On 2017-01-07 06:16 GMT
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 220 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
சிட்னி:

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 315 ரன் எடுத்தது. 223 ரன்கள் முன்னிலையில் ஆடிய ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 465 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 80.2 ஓவரில் 244 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது.

இதனால் ஆஸ்திரேலியா 220 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்பிராஸ் அகமது அதிக பட்சமாக 72 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். ஹாசல் வுட், ஸ்டீவ் ஒகிபி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா பெற்ற ‘ஹாட்ரிக்‘ வெற்றியாகும். அந்த அணி முதல் டெஸ்டில் (பிரிஸ்பேன்), 39 ரன்னிலும், 2-வது டெஸ்டில் (மெல்போர்ன்) இன்னிங்ஸ் மற்றும் 18 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று பாகிஸ்தானை ‘ஒயிட்வாஷ்’ செய்தது. மிஸ்பா தலைமையிலான பாகிஸ்தான் அணி 3 டெஸ்டிலும் தோற்றது. பரிதாபமானதே. டேவிட் வார்ணர் ஆட்ட நாயகள் விருதையும், ஸ்டீவ் சுமித் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

அடுத்து இரு அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 13-ந்தேதி பிரிஸ்பேனில் நடக்கிறது.

Similar News