செய்திகள்

ஹெராத்திற்கு பந்து எடுபடாத வகையில் பிட்ச் தயார் செய்த தென்ஆப்பிரிக்கா

Published On 2016-12-30 14:06 GMT   |   Update On 2016-12-30 14:06 GMT
ஹெராத்தின் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத வகையில் தயார் செய்ய சொன்னோம். அதை செய்த மைதான ஊழியர்களுக்கு நன்றி என டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 206 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் நிலைகுலைந்தது. இதே போன்று இலங்கைக்கு எதிராக நடந்து விடக்கூடாது என்று அந்த அணி கவனமாக இருந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஹெராத் சிறப்பாக பந்து வீசுவார். ஆஸ்திரேலியாவை இலங்கை அணி 3-0 என வீழ்த்தி இவரது பந்து வீச்சு முக்கிய பங்காற்றியது.

இதனால் ஹெராத்திற்கு எந்த வகையிலும் வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தென்ஆப்பிரிக்கா கவனமாக இருந்தது. இதனால் ஆடுகளம் ஐந்து நாட்களும் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாத வகையில் தயார் செய்ய தென்ஆப்பிரிக்கா அணி கேட்டுக்கொண்டது. அதன்படி மைதான ஊழியர்களும் தயார் செய்து கொடுத்துள்ளனர். இதனால் டு பிளிசிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாத வகையில் ஆடுகளத்தை தயார் செய்ய கேட்டுக்கொண்டோம். அதன்படி அவர்களும் ஆடுகளத்தை தயார் செய்துள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்’’ என்றார்.

Similar News