செய்திகள்

சங்ககரா, மகேலா, தில்ஷன் இடத்தை இளம் வீரர்கள் நிரப்புகிறார்கள்: மேத்யூஸ்

Published On 2016-12-24 11:37 GMT   |   Update On 2016-12-24 11:37 GMT
சங்ககரா, மகேலா ஜெயவர்தனே மற்றும் தில்ஷன் இடங்களை இளம் வீரர்கள் நிரப்புகிறார்கள் என்று இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வீரர்களாக திகழந்தவர்கள் சங்ககரா, மகேலா ஜெயவர்தனே மற்றம் தில்ஷன். இவர்கள் ஓய்விற்குப் பின் அந்த அணியில் அனுபவ வீரர்கள் யாரும் இல்லை.

இந்நிலையில், புதுமுக வீரர்களுடன் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை சந்திக்க, அந்த அணியின் சொந்த மண்ணுக்கு சென்றுள்ளது இலங்கை அணி. 26-ந்தேதி முதல் டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டி குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறுகையில் ‘‘சங்ககரா, மகேலா ஜெயவர்தனே மற்றும் தில்ஷன் ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பொழுது, அவர்கள் இடம் வெற்றிடமாகத்தான் இருந்தது. ஆனால், இளம் வீரர்கள் அவர்கள் இடத்தை நிரப்பி சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் குசால் மெண்டிஸ் மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா போன்ற இளம் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அணியில் இருப்பதை பார்க்க சிறப்பாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களை வீழ்த்தியது எளிதான காரியம் அல்ல. நம்முடைய திறமையை சிறப்பான வகையில் வெளிப்படுத்தினால், கடந்த காலங்களில் பெற்றதுபோல் வெற்றிகளை பெற முடியும்’’ என்றார்.

Similar News