இந்தியா
null

இஸ்லாமியர் இடஒதுக்கீடு இப்போதைக்கு ரத்து செய்யப்படாது - முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கம்!

Published On 2023-04-25 17:42 IST   |   Update On 2023-04-25 20:32:00 IST
  • 17 துணை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
  • இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த நான்கு சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்ய முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதர பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2பி பிரிவில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான பணிகளில் மாநில அரசு தற்போதைக்கு ஈடுபடாது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

 

பிரிவு 1 மற்றும் பிரிவு 2-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அடங்கிய 17 துணை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையில் கர்நாடக அரசு மே 9 ஆம் தேதி வரை ஈடுபட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, "வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை இந்த விவகாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. நாங்கள் தான் உச்சநீதிமன்றத்தில், வழக்கை நீங்கள் முழுமையாக விசாரணை செய்யுங்கள். விசாரணை நிறைவுபெறும் வரை அதனை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறோம்," என்றார்.

"இஸ்லாமியர்கள் இடையே- பிஞ்சார், டார்சி, சக்கர்பண்ட் உள்பட மொத்தம் 17 துணை சமூகங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு 1 மற்றும் 2ஏ கீழ் இருப்பவர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இன்னமும் இந்த பிரிவுகளில் உள்ளனர். நான்கு சதவீத இட ஒதுக்கீடு பெற்று வருவோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு பெறும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் யாருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை." என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். 

Tags:    

Similar News