இந்தியா

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி வெள்ளத்தில் குவியல் குவியலாக சாமி சிலைகள்

Published On 2023-07-25 05:39 GMT   |   Update On 2023-07-25 05:39 GMT
  • கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணா, கோதாவரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதிக்கு அப்பகுதி சேர்ந்த சிலர் நேற்று சென்றனர். அப்போது ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டனர்.

இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. திரளான மக்கள் திரண்டு வந்து ஆற்றில் இருந்த விஷ்ணு மூர்த்தி, சிவலிங்கம் மற்றும் 2 நந்தி சிலைகளை கரைக்கு கொண்டு வந்தனர்.

இதேபோல் தாடே பள்ளி மண்டலம் சீதா நகரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் நாக தேவதை கற்சிலைகள் குவியல் குவியிலாக கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சென்ற தொல்லியல் துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதில் பல சிலைகள் சேதம் அடைந்து காணப்பட்டது.

ஆற்றில் இருந்து சாமி சிலைகள் மீட்கப்பட்ட தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் ஏராளமானோர் திரண்டு வந்து சாமி சிலைகளை வணங்கி சென்றனர்.

தொல்லியல் துறை அதிகாரிகள் சாமி சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆற்று வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா அல்லது மணலுக்குள் அடியில் இருந்த சாமி சிலைகள் மழை வெள்ளம் காரணமாக மேலே வந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்களை இடிக்கும் போது சேதம் அடைந்த சாமி சிலைகளை கிருஷ்ணா நதியில் வீசி சென்றார்களா. அல்லது மழை வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றன.

கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News