இந்தியா

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு- கவிதாவிடம் 3-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை

Published On 2023-03-21 06:54 GMT   |   Update On 2023-03-21 06:54 GMT
  • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி இருந்தனர்.
  • கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி இருந்தனர்.

தெலுங்கானா முதல் மந்திரியும் பாரத் ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகரராவ் மகள் கவிதா மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

இதே போல அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 11-ந் தேதி அவரிடம் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். கடந்த 16-ந் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் கைது செய்ய தடை விதிக்க கோரியும் சம்மனை தடை செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கவிதா கோரிக்கை வைத்திருந்தார். இதை அமலாக்கத்துறை நிராகரித்து நேற்று (20-ந் தேதி) ஆஜராக உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜரானார். அவரிடம் சுமார் 11 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கவிதாவின் பினாமி என்று கருதப்படும் ஏற்கனவே கைதான அருண் ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்டதாக தெரிகிறது.

நேற்றைய விசாரணைக்கு பிறகு கவிதா இன்றும் ஆஜராக வேண்டும் என்று அமலாக் கத்துறை உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக புறப்பட்டார்.

கவிதா காலை 11.30 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் 3-வது முறையாக விசாரணை நடத்தினார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News