இந்தியா

முழு ரெயிலையும் எரிக்க திட்டமிட்டு செயல்பட்ட ஷாரூக்- போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Published On 2023-04-09 07:47 GMT   |   Update On 2023-04-09 07:47 GMT
  • போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
  • தென் மாநிலங்களில் அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துவதற்காகவே, டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளான்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 2-ந்தேதி இரவு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் டி1 பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. அந்த ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கருகி பலியானார்கள்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசாரும், தேசிய புலனாய்வு முகமையினரும் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவன் டெல்லியை சேர்ந்த ஷாரூக் செய்பி (வயது 24) என தெரியவந்தது.

ரெயிலில் தீ வைத்த அவன், பயணிகள் அங்கும் இங்கும் ஓடிய நேரத்தில் தப்பி சென்று இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டபோது மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ரத்தினகிரி பகுதியில் பதுங்கி இருந்த ஷாரூக் செய்பியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவன் கேரளா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனை கோழிக்கோடு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 11 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஷாரூக் செய்பி திட்டமிட்டு டி1 பெட்டியை தேர்ந்தெடுத்து தீ வைப்பு செயலில் ஈடுபட்டுள்ளான். அந்த பெட்டியை அடுத்து, ஏ.சி.பெட்டி உள்ளது. அந்த பெட்டிக்கு தீ பரவினால், அங்குள்ள திரைச்சீலைகள், போர்வை போன்றவையும் தீயில் எரியும். இதனால் ரெயில் முழுவதும் தீ பிடிக்கும் எனக்கருதியே டி1 பெட்டியை தேர்வு செய்ததாக ஷாரூக் செய்பி போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

மேலும் அவன் தென் மாநிலங்களில் அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துவதற்காகவே, டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளான். கேரளா செல்லும் ரெயிலில் ஏறிய அவன் சொரனூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கி உள்ளான். பின்னர் பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கேன்களில் பெட்ரோல் வாங்கி உள்ளான். அதன்பிறகு தான் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளான். அவனுக்கு வெளி மாநிலங்களில் இருந்து பலரும் உதவி செய்வதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News