இந்தியா

திருப்பதி கோவிலில் நாளை ராம நவமி ஆஸ்தானம்: அனுமந்த வாகன உற்சவம்

Published On 2024-04-16 04:52 GMT   |   Update On 2024-04-16 04:52 GMT
  • ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.
  • நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலையில் ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு, கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

இதையொட்டி நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை (18-ம் தேதி) இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரையில் மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது.

திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 77 ஆயிரத்து 511 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 553 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூல் ஆனது.பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News