இந்தியா

திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்- மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்து அறுத்துக்கொன்ற காதலன்

Update: 2022-12-06 08:52 GMT
  • பதஸ்வினி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.
  • தன்னை யாராவது பிடிக்க வந்தால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தக்கில பாடு பகுதியை சேர்ந்தவர் பதஸ்வினி (வயது 20). இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார்.

குண்டூர் மாவட்டம் மாணிக்கொண்டாவை சேர்ந்தவர் ஞானேஸ்வர். சாப்ட்வேர் என்ஜினியரான இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தார். அப்போது பதஸ்வினியுடம், ஞானேஸ்வருக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர்.

பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் பதஸ்வினியின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதஸ்வினி, ஞானேஸ்வருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் இருந்து விடியூரில் உள்ள தனது பெண் நண்பர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஞானேஸ்வர் நேற்று இரவு விடியூருக்கு சென்று பதஸ்வினியை சந்தித்து பெற்றோருக்கு தெரியாமல் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தினார். அதற்கு பதஸ்வினி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ஞானேஸ்வர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை எடுத்து பதஸ்வினியின் கழுத்தை அறுத்தார். இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பதஸ்வினி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது பதஸ்வினி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஞானேஸ்வரை பிடிக்க முயற்சி செய்தனர். தன்னை யாராவது பிடிக்க வந்தால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

இருப்பினும் ஞானேஸ்வரை பிடித்து கொண்டு பதஸ்வினியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பதஸ்வினி பரிதாபமாக இருந்தார்.

குண்டூர் போலீசார் ஞானேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News