இந்தியா

'குழிமந்தி பிரியாணி' சாப்பிட்ட 85பேருக்கு உடல் நலம் பாதிப்பு

Published On 2024-05-27 07:22 GMT   |   Update On 2024-05-27 07:22 GMT
  • உணவகத்தில் நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் பெற்று ‘குழிமந்தி பிரியாணி’சாப்பிட்டனர்.
  • குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

அரிசி மற்றும் இறைச்சியை சேர்த்து தயாரிக்கப்படக்கூடிய உணவு 'குழிமந்தி பிரியாணி'. ஏமன் நாட்டை பிறப்பிட மாகக் கொண்ட இந்த உணவு கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான உணவு வகை ஆகும். கோழி, ஆடு மற்றும் மாடு ஆகிய இறைச்சிகளை பயன்படுத்தி 'குழிமந்தி பிரியாணி' தயாரிக்கப்படுகிறது.

கேரளாவில் பலர் இதனை விரும்பி சாப்பிடுவதால் ஏராளமான அசைவ ஓட்டல்களில் 'குழிமந்தி பிரியாணி' விற்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சூர் கொடுங்கல்லூரில் உள்ள ஓட்டலில் 'குழிமந்தி பிரியாணி'சாப்பிட்ட வர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த உணவகத்தில் நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் பெற்று 'குழிமந்தி பிரியாணி'சாப்பிட்டனர்.

அவர்களில் 85 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கொடுங்கல்லூர் மற்றும் இரிஞ்சாலக்குடா பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'குழிமந்தி பிரியாணி'சாப்பிட்டதால் ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவலையறிந்த சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பினர். குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News