இந்தியா
சித்தராமையா

40 சதவீத கமிஷன் விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: சித்தராமையா

Update: 2022-04-23 03:02 GMT
யாரோ ஒரு மதகுரு தவறு செய்தார் என்பதற்காக முஸ்லிம்கள் அனைவரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்துவது சரியல்ல. அமைதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் அமைப்பு எதுவாக இருந்தாலும் சரி அதற்கு மாநில அரசு தடை விதிக்க வேண்டும். போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தனது துறையை நிர்வகிக்கும் தகுதி இல்லை. அவர் தன்னால் சரியாக பணியாற்ற முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும். குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துகளை கூறி வரும் அவரால் போலீஸ் மந்திரி பதவியின் கவுரவம் குறைந்து வருகிறது. மேலும் அவர் அராஜகத்தை ஏற்படுத்துகிறார்.

40 சதவீத கமிஷன் குறித்து நாங்கள் அதிகம் பேசியுள்ளோம். மக்களின் முடிவுக்கு விட்டுள்ளோம். வரும் நாட்களில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேட்டில் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும். நேர்மையான முறையில் படித்து தேர்வு எழுதியவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.

உப்பள்ளி கலவரத்தை ஏற்கனவே கண்டித்துள்ளேன். தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும். அதே நேரத்தில் அப்பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

யாரோ ஒரு மதகுரு தவறு செய்தார் என்பதற்காக முஸ்லிம்கள் அனைவரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்துவது சரியல்ல. அமைதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News