செய்திகள்
டோனி

ஜார்க்கண்ட் தேர்தல்: டோனியை பா.ஜனதாவுக்கு இழுக்க திடீர் முயற்சி

Published On 2019-07-07 11:05 GMT   |   Update On 2019-07-07 11:05 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மகேந்திரசிங் டோனியை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

புதுடெல்லி:

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27-ந்தேதியுடன் அந்த மாநில சட்டசபை பதவி காலம் முடிகிறது.

இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மராட்டியம், அரியானா மாநிலங்களில் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

அந்த இரு மாநிலத்தோடு ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலும் முன்னதாக நடத்தப்படுகிறது. 3 மாநிலத்திலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா உள்ளது.

இந்த நிலையில் ஜார்க் கண்ட் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனியை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

டோனி தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பையை வென்று உள்ளது. 2007-ம் ஆண்டு 20 ஓவர் கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி கோப்பையையும் அவரது தலைமையிலான இந்திய அணி வென்றது. புகழ் பெற்ற அவரை ஜார்க்கண்ட் தேர்தலில் பயன்படுத் திக்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜே.எம்.எம்.) ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமாளிக்க டோனி அவசியம் என்பதை பா.ஜனதா உணர்ந்துள்ளது. இதனால் அவரை கட்சியில் சேர்த்து டிக்கெட் கொடுக்க முடிவு செய்துள்ளது.

ஒருவேளை அவர் பா.ஜனதாவில் சேர மறுத்து விட்டால் பிரசாரத்துக்கு பயன்படுத்தவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியோடு டோனி ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வுக்கு பிறகு அவரை தங்களது கட்சிக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.


இதுதொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

நாங்கள் டோனியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் பா.ஜனதாவில் இணைவார். பா.ஜனதாவில் சேருவது எப்போது என்பது குறித்த தேதியை டோனிதான் முடிவு செய்வார்.

அவர் எங்கள் கட்சியில் சேராவிட்டாலும் எங்களுக்கு உதவியாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News