செய்திகள்
ஒரே குடும்பத்தில் 3 பேர் நின்றதால் தோல்வி- தேவேகவுடா சொல்கிறார்
ஒரே குடும்பத்தில் 3 பேர் போட்டியிட்டதால் மக்கள் தண்டித்துவிட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
பெங்களூர்:
பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 இடங்களை கைப்பற்றியது.
ஆளும் ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வென்றார்.
பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவே கவுடா தும்கூர் தொகுதியிலும், அவரது பேரன்களான நிகில் மாண்டியா தொகுதியிலும் பிரஜ்வால் ரேவண்ணா ஹசன் தொகுதியிலும் போட்டியிட்டனர்.
இதில் தேவேகவுடா, நிகில் தோல்வி அடைந்தனர். பிரஜ்வால் ரேவண்ணா மட்டும் வெற்றிபெற்றார். கர்நாடக மாநில ஆளும் கூட்டணி கட்சிகளான ஜனதாதளம், காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை சந்தித்தது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்தநிலையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தேர்தலில் போட்டியிட்டதால் தோல்வி ஏற்பட்டது என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சி பாதயாத்திரை குறித்து நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-
நான் எப்போதுமே குடும்ப அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானதை பார்த்தேன்.
அதற்காகத்தான் மக்கள் எங்களை தேர்தலில் தண்டித்து விட்டனர். எனது பேரன் நிகில் குமாரசாமி தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததை நான் எதிர் பார்க்கவில்லை. அவர் திரைப்படங்களில் நடித்து இருந்தார். இதனால் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.