செய்திகள்

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்- சக்சேனாவுக்கு 18ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

Published On 2019-02-12 10:08 GMT   |   Update On 2019-02-12 10:08 GMT
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவிடம், விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவரை 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #AgustaWestlandCase #RajeevSaxena
புதுடெல்லி:

விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று அவரை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



அப்போது அமலாக்கத்துறை தரப்பில் காவல் நீட்டிப்பு எதுவும் கேட்கப்படவில்லை. இதையடுத்து சக்சேனாவை 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், அவரது சமீபத்திய மருத்துவ பரிசோதனை அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை நாளை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அதேசமயம், சக்சேனாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அவரது வாதத்தை தொடர்ந்து  நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. #AgustaWestlandCase #RajeevSaxena
Tags:    

Similar News