செய்திகள்

காஷ்மீரில் பேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டிய பெண் கைது

Published On 2018-11-18 21:21 GMT   |   Update On 2018-11-18 21:21 GMT
காஷ்மீரில் பேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டிய பெண்ணை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். #KashmiriWoman #Militancy #Facebook
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த, 2 குழந்தைகளுக்கு தாயான சாஷியா என்கிற பெண் ‘பேஸ்புக்’ மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சாஷியாவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் அவருடைய ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி அவரை கைது செய்தனர்.

அவருடைய வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாஷியாவின் சகோதரர்கள் 2 பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சாஷியா தனது ‘பேஸ்புக்’ மூலம் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேரவும், ஆயுதங்களை வாங்கவும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்து அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் சமீபத்தில் ஆயுதங்கள் வாங்கி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சாஷியாவுக்கு பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #KashmiriWoman #Militancy #Facebook 
Tags:    

Similar News