செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு விரைவில் வருகிறது புதிய தேசியக் கொள்கை: மத்திய மந்திரி தகவல்

Published On 2016-10-17 12:11 GMT   |   Update On 2016-10-17 12:11 GMT
மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசு விரைவில் புதிய தேசிய கொள்கையை கொண்டு வரப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
வதோதரா:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வரும் 22-ம்தேதி 14 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்க உள்ள இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தவார் சந்த் கெலாட் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மூத்த குடிமக்களின் ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான புதிய தேசிய கொள்கையை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும். இதற்காக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுடன் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆலோசனை நடத்தி திட்ட முன்வரைவு தயாரித்துள்ளது.

மக்கள் தொகை பரவல், மூத்த குடிமக்களின் சமூக பொருளாதார தேவைகள், சமூக மதிப்பீட்டு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த திட்ட முன்வரைவு பிரதமர் மோடியிடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம்.

இது குறித்து அரசு ஏற்கனவே அரசுசாரா அமைப்புகள் மற்றும் பிற துறையினரிடம் கருத்து கேட்டு பெறப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கையானது நாடு முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க வகை செய்யும்” என்றார்.

Similar News