இந்தியா

கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலி? பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Published On 2023-09-12 06:37 GMT   |   Update On 2023-09-12 06:37 GMT
  • பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
  • கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது.

திருவனந்தபுரம்:

கொரோனா பரவத்தொடங்கியபோது இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவ தொடங்கியது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகிய ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சில மாவட்டங்களில் உயிர் பலியும் ஏற்பட்டது.

பின்பு கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு நிபா வைரஸ் தொற்று பரவுவதாகவும், அந்த தொற்று பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத் தக்க ஒரு நபர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்தவித காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது.

இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக காதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

4 மற்றும் 9 வயதுடைய 2குழந்தைகள், 25 மதிக்கத்தக்க ஒருவர் என 3பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதேபோல் வடகரை அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்த 40வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காய்ச்சல் பாதித்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இறந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டவர்களிடம் சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருககிறது. அந்த பரிசோதனை முடிவு வந்தபிறகே, இறந்தவர்கள் 2 பேரும் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தார்களா? என்பது தெரியவரும்.

கோழிக்கோடு பகுதியில் 2 பேர் காய்ச்சல் பாதித்து இறந்திருக்கும் சம்பவம் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அவரச உயர்மட்ட கூட்டத்தை கூட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கோழிக்கோட்டில் இறந்த 2பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News