உண்மை எது

இது அந்த சம்பவம் அல்ல... சம்பந்தம் இல்லாத வீடியோவை மீண்டும் வைரலாக்கும் நெட்டிசன்கள்

Published On 2022-08-22 11:03 GMT   |   Update On 2022-08-22 11:03 GMT
  • நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினர்.
  • நகைகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கின்றனர்

சென்னை:

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம், நகைகளை கைப்பற்றியதாக கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. 

அதில், 'திருமலை திருப்பதி பாலாஜி கோயிலில் 16 அறங்காவலர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரின் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 128 கிலோ தங்கம்... 150 கோடி ரூபாய் ரொக்கம்... 70 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள்!!!' என்று பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஏராளமான நகைகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதுபோல் உள்ளது.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் வீடியோவுடன் பகிரப்படும் தகவல் குறித்து கூகுள் மூலம் தேடும்போது, ஏற்கனவே இந்த வீடியோவை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலரான சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையுடன் தொடர்புபடுத்தி கடந்த ஆண்டு வெளியிட்டதும், அது உண்மைல்ல என்றும் தெரியவந்தது. 

உண்மையில் அந்த வீடியோவது, தமிழகத்தின் வேலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல்துறையினர் மீட்டு, பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டியபோது எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வீடியோவில் 'மாவட்ட காவல்துறை, வேலூர்' என தெளிவாக இருக்கிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. அதே வீடியோவையே மீண்டும் சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.

எனவே, தற்போது பரவும் வீடியோவுக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது.

Tags:    

Similar News