உண்மை எது

இது இம்ரான் கான் பேரணியில் எடுத்தது அல்ல... பழைய புகைப்படத்துடன் வைரலாகும் புதிய தகவல்

Published On 2022-11-08 08:02 GMT   |   Update On 2022-11-08 08:02 GMT
  • பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார்.
  • 2021ம் ஆண்டு இதே புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் கடந்த வியாழக்கிழமை வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தியபோது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கான் காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை குணமடைந்துவருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிடிஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இறந்து போன ஒருவரின் உடல் அருகே சிறுவன் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர். அதில், இம்ரான் கான் பேரணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்துபோனவர் என்று பதிவிட்டனர்.

இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக இணையதளங்களில் தேடிய ஆய்வு செய்ததில், இது பழைய புகைப்படம் என தெரியவந்துள்ளது. 2021ம் ஆண்டு இதே புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் வேறு தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தந்தையின் உடல் அருகே அவரது மகன் இருப்பதாகவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹெல்மண்ட் மாகாணத்தில் கொல்லப்பட்ட தனது தந்தையின் சடலத்தின் அருகில் அவரது மகன் கண்ணீருடன் இருப்பதாக மற்றொரு நபர் பதிவிட்டிருந்தார். மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்புகள் எங்கே உள்ளன? என்று கேள்வி எழுப்பிய அவர், ஆப்கான் உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதன்மூலம் இந்த புகைப்படம் பழையது என்பதும், எங்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன் சமீபத்தில் பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையது என்று பொய்யாக பகிரப்பட்ட பழைய புகைப்படம் என்பது தெளிவாகிறது.

Tags:    

Similar News