உண்மை எது
மிஷனரீஸ் ஆப் சாரிட்டி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக வைரலாகும் தகவல்
அன்னை தெரசா உருவாக்கிய மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
அன்னை தெரசா உருவாக்கிய 'மிஷனரீஸ் ஆப் சாரிட்டி' அமைப்பின் சேவை மையங்கள் நாடு முழுக்க செயல்பட்டு வருகின்றன. மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கி கணக்குகள் அனைத்தும் சமீபத்தில் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மத்திய அரசு மீது கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதுபற்றிய இணைய தேடல்களில், மம்தா பானர்ஜி டுவிட்டர் பதிவு வெளியான சில மணி நேரங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மிஷனரீஸ் ஆப் சாரிட்டி சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, 'மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகளை மிஷனரீஸ் ஆப் சாரிட்டி பின்பற்றவில்லை. இதற்கான பதிவை புதுப்பிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மறுபரிசீலனை செய்ய மிஷனரீஸ் ஆப் சாரிட்டி சார்பில் இதுவரை கோரிக்கை விடுக்கப்படவில்லை.'
'எனினும், மிஷனரீஸ் ஆப் சாரிட்டியின் வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. தங்களின் வங்கி கணக்குகளை முடக்க மிஷனரீஸ் ஆப் சாரிட்டி பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு மிஷனரீஸ் ஆப் சாரிட்டி வங்கி கணக்குகளை முடக்கவில்லை என உறுதியாகிவிட்டது.