செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்

Published On 2019-06-23 11:25 GMT   |   Update On 2019-06-23 11:25 GMT
எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று பேசியது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி:

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திருச்சியில் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று தெரிவித்தார். அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கே.என்.நேருவின் பேச்சுக்கு பதில் அளித்த, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கூட்டணி சூழ் நிலைக்கு ஏற்ப அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்றார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறுகையில், கே.என். நேருவின் கருத்து தி.மு.க.வின் கருத்தாகி விடாது. அவர் எனக்கு நல்ல நண்பர். ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை என்றார். இதனால் கே.என்.நேருவின் பேச்சு தி.மு.க-காங்கிரஸ் இடையே திடீர் மோதலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருத்துக்கு கே.என்.நேரு விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரசுக்கு அதிக இடம் பெறவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தென் சென்னை மாவட்டத்தில் அதிக இடங்கள் பெற வேண்டும் என அந்த மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் நாளிதழ்களில் வந்துள்ளன.


காங்கிரஸ் கட்சியினருக்கே அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் உள்ள நிலையில், தி.மு.க. வினருக்கும் அந்த எண்ணம் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே அப்படி பேசினேன். நான் கூறிய கருத்து தி.மு.க.வின் கருத்து அல்ல. எனது தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டே பேசினேன். சாதாரண தொண்டன் என்ற அடிப்படையில் இதனை தெரிவித்தேன்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அனைத்து கட்சிகளுடனும் அனுசரித்து போக வேண்டும் என்ற கருத்தை கட்சி தலைமையிடம் தெரிவித்தவன் நான்.

கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த போதே காங்கிரசார் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்தும், தி.மு.க. குறித்தும் பல்வேறு விமர்சனங்களை செய்துள்ளனர். இருப்பினும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு தான் நாங்கள் இப்போது வரை கூட்டணியில் உள்ளோம். கூட்டணி என்பது தலைமை எடுக்கும் முடிவு.

காங்கிரசார் பேசி வரும் கருத்துகளால் எந்தவித பிளவும் வந்து விடக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தலைமைக்கு தெரியப்படுத்துவோம்.

திருச்சி மாநகராட்சியில் கடந்த முறை 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவியை கொடுத்து விட்டு, நாங்கள் கைகட்டி கொண்டு நின்றோம். இம்முறை திருச்சிக்கு மேயர் பதவியை கொடுப்பது குறித்து தி.மு.க. தலைவர் முடிவெடுப்பார். தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று நான் பேச வில்லை. தலைவரின் முடிவுக்கு கட்டுப்படும் மாவட்ட செயலாளராக என்றுமே நான் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News