உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே சாலை அமைக்க கோரி மாணவ- மாணவிகளுடன் கிராம மக்கள் மறியல்

Published On 2023-07-03 06:10 GMT   |   Update On 2023-07-03 06:10 GMT
  • குண்டும் குழியுமான சாலையால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
  • கிராமமக்கள் உடனடியாக மறியல் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த அத்திப்பேடு பகுதியில் இருந்து இருளிப்பட்டு வரை உள்ள 2 கிலோ மீட்டர் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப் படாமல் உள்ளது.

இதனால் அந்த சாலை குண்டு குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது.

குண்டும் குழியுமான சாலையால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழைகாலங்களில் நிலைமை படுமோசமாகி விடுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்க கோரி இன்று காலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அத்திப்பேடு சர்வீஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஆவடி உதவி கமிஷனர் குமரேசன்,சோழவரம் இன்ஸ்பெக்டர், ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், முரளி ஆகியோர் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

எனினும் கிராமமக்கள் உடனடியாக மறியல் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது

Tags:    

Similar News