பழனி பஸ் நிலையத்தில் சாலையோர வியாபாரியை தாக்கியவர் கைது
- தொழில் போட்டியில் அப்பாவி வியாபாரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேற்று வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பழனி பஸ் நிலையத்தில்,சாலையோரத்தில் செல்போன் கவர் விற்கும் வியாபாரியை ஒருவர் சரமாரியாக தாக்கி மிரட்டுவது பதிவாகி இருந்தது.
சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மதுரையை சேர்ந்த ராஜன் (40) என்பவர் பழனியில் தங்கி செல்போன் கவர்களை விற்று வந்தார். பஸ் நிலையத்தில் பழனியை சேர்ந்த சுதர்சன் (29) என்பவர் செல்போன் உதிரி பொருட்கள் கடை வைத்துள்ளார். அவர் ராஜனிடம் வெளியூரிலிருந்து இங்கு வந்து நீங்கள் செல்போன் கவர் விற்றால் கடை வைத்துள்ள எங்கள் வியாபாரம் பாதிக்கும். எனவே இங்கு வரக்கூடாது என கூறி அவரது கன்னத்தில் அறைந்தது தெரியவந்தது. தொழில் போட்டியில் அப்பாவி வியாபாரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சுதர்சனை பழனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.