உள்ளூர் செய்திகள்

பெருந்துறை அருகே கீழ் பவானி வாய்க்காலில் குளித்த ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2023-04-24 15:38 IST   |   Update On 2023-04-24 15:38:00 IST
  • உடலை பார்த்து நண்பர்கள், உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
  • காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் முகமது ரிஸ்வான் (20). இவர் காங்கயத்தில் உள்ள கார்மெண்ட்ஸ்சில் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜுபைர் (22). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இருவரும் நண்பர்கள். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்காக முகமது ஜுபைர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை தங்களது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த முகமது தமிமுன் அன்சாரி (23), அபூபக்கர்சித்திக், முகமது ரிஸ்வான் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடினர்.

இதனையடுத்து நண்பர்கள் 5 பேரும் நேற்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக நீர்நிலைகளில் குளிக்கலாம் என முடிவு செய்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் அருகே உள்ள பெத்தாம்பாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றனர்.

தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்தி ற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக சென்று கொண்டிருந்தது. இது தெரியாமல் விளையாட்டு மிகுதியால் முகமது ரிஸ்வான், முகமது ஜுபைர் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் 3 பேரும் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். பின்னர் சிறிது நேரத்திலேயே இருவரும் நீரில் மூழ்கினர்.

இது குறித்து காஞ்சி கோவில் போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் கீழ்பவானி வாய்க்காலில் தேடிப் பார்த்தனர். பின்னர் இரவு நேரம் ஆனதால் தற்காலிகமாக தேடும் பணியை அவர்கள் நிறுத்தினர்.

அதன் பின்பு இன்று காலை தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் தேடினர். அப்போது இன்று காலை முகமது ரிஸ்வான் மற்றும் முகமது ஜுபைர் உடல் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டது. அதன்பின் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்களது உடலை பார்த்து நண்பர்கள், உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News