கர்நாடகாவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு புதிய சிங்கம்
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலியை கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொடுத்து உள்ளனர்.
- ஆண் சிங்கத்தை தனி கூண்டில் வைத்து பூங்கா மருத்துவர்கள் அனைத்து பரிசோதனையையும் செய்து வருகிறார்கள்.
வண்டலூர்:
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், ஏராளமான பறவைகள் உள்ளன.
இதனைக்காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்த கால கட்டத்தில் பூங்காவில் பராமரித்து வந்த நீலா, பத்ம நாபன் ஆகிய இரண்டு சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. அதே ஆண்டில் உடல் நலக்குறைவால் கவிதா, புவனா மற்றும் விஜி ஆகிய சிங்கங்களும், பூங்கா மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மணி என்ற சிங்கமும் பரிதாபமாக இறந்தன.
இதனால் பூங்காவில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வையாளர்கள் வேனில் சென்று சிங்கங்கள் உலாவிடங்களில் பார்க்கும் பகுதி தடை செய்யப்பட்டது.இதனை மீண்டும் திறக்க வேண்டும் என்று பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டனர். விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற்று மற்ற மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் சாலை மார்க்கமாக வாகனத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு பதிலாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலியை கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொடுத்து உள்ளனர். புதிதாக கொண்டு வந்து உள்ள ஆண் சிங்கத்தை தனி கூண்டில் வைத்து பூங்கா மருத்துவர்கள் அனைத்து பரிசோதனையையும் செய்து வருகிறார்கள்.
பின்னர் சில வாரங்களில் இந்த புதிய சிங்கம் பூங்காவில் உள்ள மற்ற சிங்கங்களுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் அதன் உலாவிடம் பகுதியில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.