உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு குட்கா கடத்திய 4 பேர் கைது

Published On 2023-04-30 13:48 IST   |   Update On 2023-04-30 13:48:00 IST
  • புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது.
  • புகையிலை மூட்டைகளை லோடு ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரியில் இருந்து லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் ரூ. 4.10 லட்சம் மதிப்பிலான 530 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து 4 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் அம்பையை சேர்ந்த சூர்யமாதவன் (23), எடிசன் (24), திருவாலீஸ் வரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி (30), வி.கே.புரத்தை சேர்ந்த தியாகராஜன் (29) என்பது தெரியவந்தது.

லாரி டிரைவரான தியாகராஜன், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு ஏற்றி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தபோது திருவனந்தபுரத்திற்கு மெடிக்கல் பொருட்களை ஏற்றி உள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அவரிடம் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி புகையிலை பொருட்களை லாரியில் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நெல்லை வந்ததும், லோடு ஆட்டோ டிரைவரான எடிசன் அவரை முன்னீர்பள்ளத்திற்கு வரச்செய்து அங்கு வைத்து புகையிலை மூட்டைகளை லோடு ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News