உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த கூடங்குளம் பகுதியை சேர்ந்த தாய் - மகன்கள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்

Published On 2022-11-07 08:24 GMT   |   Update On 2022-11-07 08:24 GMT
  • கடந்த 6 வருடங்களாக வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதமாக மட்டுமே வட்டியை செலுத்தவில்லை.
  • தற்போது அவர்கள் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளித்து சென்றனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த வளன் என்பவரது மனைவி பியோனி தனது 4 மகன்களுடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் நின்று இருந்த போலீசார் அந்த பெண்ணின் கையில் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு கேனில் பெட்ரோல் இருந்தது. உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்து பியோனியிடம் விசாரித்தனர். அவர் பையில் இருந்த மனுவை எடுத்து பார்த்தபோது அதில் கூறியிருந்ததாவது:-

வளன் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சிகள் எடுத்துள்ளார். அங்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் இடிந்தகரை பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே மாத சம்பளம் கொடுத்துள்ளனர்.

மேலும் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார். அதே நேரத்தில் வட்டிக்கு பணம் கொடுத்திருந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். நான் 4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறேன்.

கடந்த 6 வருடங்களாக அவர்களுக்கு வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதமாக மட்டுமே நான் வட்டியை செலுத்தவில்லை. ஆனால் தற்போது அவர்கள் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்களது பணத்தை திருப்பிக் கொடுக்க எனது வீட்டை நான் விற்க வேண்டும். அதற்கு 6 மாதம் அவகாசம் அவர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News