உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே பட்டப்பகலில் காண்டிராக்டர் வீட்டில் ரூ.1½ லட்சம் - நகை கொள்ளை

Published On 2022-06-14 12:18 IST   |   Update On 2022-06-14 12:18:00 IST
  • கடந்த வாரம் பிரகாஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து போனது.
  • மீஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். கட்டிட காண்ட்ராக்டர். இவரது மனைவி சரண்யா.

நேற்று காலை வேலை சம்பந்தமாக பிரகாஷ் வெளியில் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி சரண்யா மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் சரண்யா வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகையை அள்ளிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கொள்ளையர்களை சரண்யா தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் சரண்யாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். இதில் முகத்திலும் மூக்கிலும் ரத்தம் வழிந்தது.

பின்னர் கொள்ளையர்கள் நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சரண்யாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த வாரம் பிரகாஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து போனது. எனவே மர்மகும்பல் கொள்ளை திட்டத்துக்காக நாயை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்த கொள்ளை தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மீஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது. இதனை தடுத்து கொள்ளைகும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News