சேலம் அருகே கிளினிக் வைத்து சிகிச்சை செய்த போலி டாக்டர் கைது
- பரமேஸ்வரன் மீது போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
- மற்ற கிளினிக்குகளில் தொடர் சோதனை நடத்தப்படும் என, மருத்து கட்டுப்பாடு துறையினர் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் வீராணம் அடுத்த பள்ளிப்பட்டியில் உள்ள தனியார் கிளினிக்கில் நேற்று சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி உத்தரவின்படி வேம்படிதாளம் அரசு மருத்துவமனை சித்தா உதவி டாக்டர் வெற்றிவேந்தன், மருந்துகள் ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, மருந்தாளுனருக்கு படித்து விட்டு, கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு பரமேஸ்வரன் (வயது 41) என்பவர் அலோபதி சிகிச்சையளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பரமேஸ்வரன் மீது போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
அதன்பேரில் போலீசார், இந்திய மருத்துவ கவுன்சில், 1956-ன் கீழ் வழக்குப்பதிந்து, பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள மற்ற கிளினிக்குகளில் தொடர் சோதனை நடத்தப்படும் என, மருத்து கட்டுப்பாடு துறையினர் தெரிவித்தனர்.