தமிழ்நாடு

அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோ


திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதல்- பெட்ரோல் குண்டு வீச்சு

Published On 2022-08-14 05:25 GMT   |   Update On 2022-08-14 05:26 GMT
  • ரத்தினம் என்பவரது மாட்டுத்தொழுவத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
  • திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கரம்பவிளையில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை திருவிழா முளைப்பாரி ஊர்வலம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இதில் இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

அப்போது கரம்ப விளை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது.

ரத்தினம் என்பவரது மாட்டுத்தொழுவத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் மாட்டுத்தொழுவம் சேதம் அடைந்தது. மேலும் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கினர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர்கள் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய உதவியாளர் மேரி மற்றும் சாத்தான்குளம் டி.எஸ்.பி.யின் பாதுகாவலர் பால்பாண்டி (27) ஆகியோர் கல்வீச்சில் காயம் அடைந்தனர்.

மேலும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. காவல் துறையினரின் இருசக்கர வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பத்தில் அப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 12 பேரை திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News