உள்ளூர் செய்திகள்

வனச்சோதனை சாவடி முன்பு பொங்கலிட்ட திருநங்கைகள்.

காரையாறு அம்மன் கோவில் செல்ல அனுமதி மறுப்பு: வனச்சோதனை சாவடியில் அதிகாலை வரை நீடித்த பக்தர்கள் போராட்டம்

Published On 2023-03-08 07:04 GMT   |   Update On 2023-03-08 07:04 GMT
  • சில திருநங்கைகள் தங்கள் குலதெய்வத்திற்கு பொங்கல் விட முடியாத நிலை ஏற்பட்டதாக கூறி வனச்சோதனை சாவடி முன்பு பொங்கலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
  • ஆத்திரமடைந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடியை முற்றுகையிட்டனர்.

சிங்கை:

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையார் வனப்பகுதியில் உள்ள வனப்பேச்சியம்மன் கோவிலில் கடந்த வாரம் கால்நாட்டு விழாவுடன் தொடங்கி கொடைவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் வந்த பக்தர்களை வனத்துறையினர் திடீரென தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் காரையார் செல்லும் அரசு பஸ்சில் செல்ல தயாரான நிலையில் வனத்துறையினர் அதற்கும் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவியது.

அங்கு நள்ளிரவு வரை போராட்டம் நடந்த நிலையில், சில திருநங்கைகள் தங்கள் குலதெய்வத்திற்கு பொங்கல் விட முடியாத நிலை ஏற்பட்டதாக கூறி வனச்சோதனை சாவடி முன்பு பொங்கலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உடனே இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நள்ளிரவில் சோதனை சாவடிக்கு நேரில் சென்று பக்தர்களுக்கு ஆதரவாக போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் அடர் வனப்பகுதி வழியாக நடந்து மட்டுமே வனப்பேச்சியம்மன் கோவிலுக்கு செல்ல முடியும். அப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை என தெரிவித்தனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை சுமார் ஒரு மணி வரை பெண், குழந்தைகள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலையில் முதற்கட்டமாக 2 வாகனங்களில் முக்கிய பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News