உள்ளூர் செய்திகள்

பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா: ரூ.7 லட்சத்துக்கு நலத்திட்ட உதவி- மறைமலை நகரசபை தலைவர் வழங்கினார்

Published On 2023-06-19 07:01 GMT   |   Update On 2023-06-19 07:01 GMT
  • வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.
  • முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது.

மேல்மருவத்தூர்:

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83- வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டா ரெட்டியார், ஆன்மிக இயக்க வேள்விக் குழுவின் இணைச்செயலாளர் கோபி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தணிக்கை குழு இணைச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைத்தலைவர் மன்மதன் அனைவரையும் வரவேற்றார். மறைமலை நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது. 7 மணி அளவில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் காலை 7:30 மணிக்கு மறைமலை நகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும்,இயற்கை வளம் பெறவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து காலை 10 மணிக்கு மறைமலைநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 20 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிதிவண்டிகளும்,13 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களும்,13 சலவைப் பெட்டிகள், 15 பயிர் பூச்சி மருந்து தெளிப்பான்கள், 6 விவசாய கருவிகள் 200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை மறைமலை நகர் நகர மன்ற தலைவர் சண்முகம் கலந்து கொண்டு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News