உள்ளூர் செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்த முன்னாள் அ.தி.மு.க பிரமுகர் கைது

Published On 2022-11-12 08:23 GMT   |   Update On 2022-11-12 08:23 GMT
  • தேர்வு எழுதிய மாரிச்சாமி முதல் கட்டமாக ரூ.8.20 லட்சம் தந்தார். ஆனால் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
  • ஆத்மா சிவக்குமார் போல் மேலும் சிலரிடம் ஆத்மா சிவக்குமார் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடிக்கும் அதிகமாக பணம் மோசடி செய்திருப்பதாக தெரிகிறது.

கோவை:

ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பொன்மேட்டை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது34). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மாரிச்சாமி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

இவருக்கு கோவை கவுண்டம்பாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்கிற ஆத்மா சிவக்குமார் (53) என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டது. இவர் அ.தி.மு.க பிரமுகர்.

தனக்கு அ.தி.மு.க அமைச்சர்களாக இருந்த சிலரிடம் நல்ல நட்பு இருக்கிறது. அரசு துறையில் பல்வேறு பதவிக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முடியும். குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர், மின் வாரிய பணிகள், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி உட்பட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவேன் எனக்கூறி உள்ளார். இதனால் மாரிச்சாமிக்கு, ஆத்மா சிவக்குமார் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து மாரிச்சாமி, ஆத்மா சிவக்குமாரிடம் கிராம நிர்வாக அலுவலர் பணி கேட்டுள்ளார். அவர் கடந்த 2016-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்தார். தேர்வு எழுதினால் போதும் ரூ.10 லட்சம் கொடுத்தால் வேலை கிடைத்து விடும் என ஆத்மா சிவக்குமார் கூறினார்.

தேர்வு எழுதிய மாரிச்சாமி முதல் கட்டமாக ரூ.8.20 லட்சம் தந்தார். ஆனால் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இவரை போல் மேலும் சிலரிடம் ஆத்மா சிவக்குமார் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடிக்கும் அதிகமாக பணம் மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த 68 பேர் இதுவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்தாரர்களிடம் மட்டும் இவர் ரூ.2.17 கோடி வாங்கியிருப்பது தெரியவந்தது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் இவர் அ.தி.மு.க நிர்வாகி என சொல்லி வேலை வாங்கி தருவதாக 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியிருப்பதாக தெரிகிறது. முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் பெயரிலும் இவர் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இவரிடம் ஏமாந்த நபர்கள் பணத்தை வாங்க பல முறை முயற்சி செய்தும் முடியாமல் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க குவிந்து வருகின்றனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆத்மா சிவக்குமாரை இன்று கைது செய்தனர்.

இவருக்கு மோசடியில் உதவிய அவரது அக்கா சத்திய பாமா, உறவினர் ஜெயகிருஷ்ணன், மணிகண்டன், சரவணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சில மாதங்களாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஆத்மா சிவக்குமார் மீது போலீசில் புகார் அளித்திருந்தனர். போலீசார் கைது செய்து விடுவார்கள் என தலைமறைவாக இருந்த ஆத்மா சிவக்குமார் தற்போது சிக்கி உள்ளார். மோசடி செய்த பணத்தில் பல இடங்களில் இவர் அடுக்குமாடி வீடுகள், நிலங்கள் வாங்கி குவித்திருப்பதாக தெரிகிறது. இவற்றை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News