உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து விஷ சாராயம் குடித்த 2 பேர் சிகிச்சைக்கு பயந்து ஓட்டம்

Published On 2023-05-15 14:01 IST   |   Update On 2023-05-15 14:01:00 IST
  • ராஜி, சங்கர் ஆகிய இருவரும் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர்.
  • தப்பி ஓடிய 2 பேரையும் செங்கல்பட்டு டவுன் போலீசார் தேடிவருகிறார்கள்.

மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷசாராயம் குடித்ததில் நேற்று முன் தினம் பரிதாபமாக இறந்தனர். சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) ஆகியோரும் விஷசாராயம் குடித்ததில் நேற்று இறந்தனர். இன்று காலை பெருங்கரணை பகுதியை சேர்ந்த முத்து (55) என்பவரும் விஷசாராயத்துக்கு பலியானார்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் விஷசாராயம் குடித்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செம்பு,ராஜி(32), பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், சங்கர் (48) ஆகியோரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சைபெற்று வந்த ராஜி, சங்கர் ஆகிய இருவரும் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர். இதனால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தப்பி சென்றவர்களுக்கு விஷசாராயத்தின் பாதிப்பு லேசாக இருந்ததாக தெரிகிறது. எனினும் அவர்களை பிடித்து சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். தப்பி ஓடிய 2 பேரையும் செங்கல்பட்டு டவுன் போலீசார் தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News