தமிழ்நாடு
null

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது- இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Published On 2023-09-15 05:16 GMT   |   Update On 2023-09-15 05:17 GMT
  • 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
  • மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன் பிடிக்க சென்றபோது 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்ட அவர்களை சிங்கள கடற்படையிர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதேபோல் புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் சென்ற 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17 பேரையும் வருகிற 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். வாழ்வாதாரம் இழந்த ஏராளமானோர் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று வேலைக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.இதில், 50-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படாததாலும், இயற்கை சீற்றங்களினாலும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று துவங்கி உள்ளனர்.

இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அத்துடன் பல கோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடலில் சூறைக்காற்று வீசியதால் கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு தடை, ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு உரிய விலை தராததை கண்டித்து வேலை நிறுத்தம் உள்ளிட்டவைகளால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

12 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News