உள்ளூர் செய்திகள்

சூளைமேட்டில் இருந்த வாடகை தாய்கள் 11 பேர் வேறு இடத்துக்கு மாற்றம்

Published On 2022-10-18 12:45 IST   |   Update On 2022-10-18 12:45:00 IST
  • பெண்களை பராமரிக்க தனியாக பெண்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.
  • பெண்களிடம் நேரில் விசாரிக்க முயன்ற அதிகாரிகளை அந்த வீடுகளுக்குள் அனுமதிக்கவில்லை.

சென்னை:

சென்னை சூளைமேட்டில் வாடகைத்தாய் பண்ணைகள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் நேரடியாக அந்த வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

2 வீடுகளில் மொத்தம் 11 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். கரு செலுத்தப்பட்டு கர்ப்பிணியானதும் இந்த வீடுகளில் அடைத்து வைத்து விடுகிறார்கள்.

பிரபலமான 2 மருத்துவமனைகளின் மூலம் வாடகைத் தாயாக இவர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர். இந்த பெண்களை பராமரிக்க தனியாக பெண்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். பெண்களிடம் நேரில் விசாரிக்க முயன்ற அதிகாரிகளை அந்த வீடுகளுக்குள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து சோதனைக்கு சென்றவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கும் நேரில் சென்று இது தொடர்பாக விசாரித்தனர்.

அப்போது வாடகைத் தாய்மார்கள் பெயர் விபரம், யாருக்காக குழந்தை பெற்று தருகிறார்கள், உரிய விதிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்களா? என்ற விபரங்களை கேட்டனர். ஆனால் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே அந்த 11 பெண்களையும் அங்கிருந்து அவசர அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றி விட்டார்கள். அவர்களை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.

இந்த விவகாரத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் வாடகைத்தாய் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கருத்தரித்தல் மையங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளார்கள்.

Tags:    

Similar News