உள்ளூர் செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய மாயனூர் கதவணை

Published On 2024-12-12 11:13 IST   |   Update On 2024-12-12 11:13:00 IST
  • இன்று நீர் வரத்து அதிகரித்து 4 ஆயிரத்து 371 கன அடியாக உயர்ந்தது.
  • தண்ணீர் முழுவதும் காவிரியில் 4121 கனஅடி, தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் திறக்கப்பட்டு வருகிறது.

கரூர்:

கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டு உள்ளது. இங்கு மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.

இங்கு தண்ணீர் திறந்து விட்டால் கரூர், திருச்சி, தஞ்சையை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.

தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

நேற்று மாயனூர் கதவணைக்கு 371 கன அடி நீர் வந்தது. இந்த நிலையில் இன்று நீர் வரத்து அதிகரித்து 4 ஆயிரத்து 371 கன அடியாக உயர்ந்தது. இதனால் மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இந்த தண்ணீர் முழுவதும் காவிரியில் 4121 கனஅடி, தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் திறக்கப்பட்டு வருகிறது.

கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சாகுபடி வயல்கள் பாதிக்கப்படும் என்பதால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

Tags:    

Similar News